Friday, 29 June 2018

திரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015

 திரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015

 


உலகின் மிக நீளமான ரயில் பயணம் மட்டுமல்ல, என் ஆழமான மனதில் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்த கனவுப் பயணமும் கூட. விலடிவொசஸ்தொக் முதல் மோஸ்கோ (Vladivostok to Moscow) வரை எறக்குறைய 9,259 கிமீ. ஏழு நாட்கள் பயணம் . எனக்கு கிடைத்தது 5 நாட்கள் பயணம் மட்டுமே, 7000 கி மீ.  உலான் உடெ முதல் மோஸ்கோ வரை (Ulan Ude to Moscow). இதை என் வாழ் நாள் சாதனை என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வதும் உண்டு. மார்தட்டிக் கொண்டதற்கு மறு கணமே எனைப் பார்த்து நானே சிரித்துக் கொண்டதும் உண்டு. 

இந்தப் பயணம் நீண்டது போல நடந்த சுவாரிசியக் கதைகளும் நீளும் நிச்சயமாக. எனவே, கதைகளைத் துண்டு போட்டே உங்களுக்கு பந்தி வைக்க உள்ளேன். எனது நோக்கம் ஒன்று மட்டுமே, என் அனுபவங்கள் உங்களையும் இப்பயணத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டும். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஒரு வேளை யார் கண்டது, என் பயணம் உங்கள் பயணத்திற்காகவும் இருக்கலாம்.


எனவே நண்பர்களே, என்னோடு தொடர்ந்து வாருங்கள், உங்கள் மனமும் குறுகிய ரயில் பெட்டிக்குள் குதூகலத்திற்கு தயாராகும். ரயில் பெட்டியின் கண்ணாடி வழி இந்த உலகத்தை கொஞ்சம் எட்டிப்பாருங்கள், மரங்கள் நகரும், மழழைகள் போல நாணல்களும் உங்களுக்கு 'பாய் பாய்' சொல்லும். 'கடக்குமுடக்கு' என்ற ரயில் பெட்டியும் தண்டவாளமும் உரசும் சத்தம் சங்கீதமாகும். பயணங்கள் முடிவதில்லை, அது இன்னொரு பயணத்திற்கான ஆரம்பமே என்பதை கண்டிப்பாக உங்களுக்கு உணர்த்தும். நன்றி படித்தமைக்கு. நன்றி பகிர்ந்தமைக்கு.என்னைச் சார்ந்தவர்கள் மத்தியில் பொதுவாக ரஷ்யா என்ற சொல் பீதியைக் கிளப்புகின்ற சொல்லாகவே இருந்து வந்தது. வருத்தம் என்னவென்றால், இந்தக் கருத்தை நியாயப்படுத்துகின்ற வகையில் அவர்கள் யாரும்  அங்குச் சென்றவர்களோ அல்லது அந்த நாட்டைடைப் பற்றிய விஷயங்களை முழுமையாக அறிந்தவர்களோ அல்ல. ஆனால், பொதுவாக எல்லோலோருக்கும் அந்தக் காலக்கட்டத்தில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்துக்கொண்டிருந்த போர் தெரிய வந்திருந்தது (ஜனவரி, 2015). அது மட்டுமின்றி ரஷ்யா என்றாலே MH17 விழுந்து நொறுங்கிய நினைவுகள் கண்முன் கொண்டு வரும் காலக்கட்டம் அது. MH17 என்றாலே MH370 மாயக்கண்ணாடிக்குள் மறைந்து போன நினைவுகள் கண்முன் நிழலாடும் காலக்கட்டமும் அது. 

என்னுடைய பயணம் 26 மே 2015 என்று முடிவானது. பயணத்தின் முந்தய ஆய்விற்காக நிறைய இணையத் தளங்களை உலா வர ஆரம்பித்தேதேன். அப்பொழுதுதான் ரஷ்யா உக்ரைன் மத்தியில் வெடித்துக்கொண்டிருந்த போர் செய்தி எனக்கு தெரிய வந்தது. இந்தப் போர் என் பயணத்திதிற்கு மிரட்டலாகவும் உருவெடுக்க ஆரம்பித்தது. 

நிலவரத்தை மென்மேலும் அறிந்துக்கொள்ளள, வேலை முடிந்து திரும்பியதும் CNN, BBC, ALJAZEERA போன்ற செய்தி ஒளியலைகளை மட்டுமே பார்க்க ஆரம்பித்தேதேன்.. இதனால், எனது பத்து வயது மகனுக்கும் எனக்கும் 'ஒளியலைப் போர்' அடிக்கடி வெடித்த வண்ணமாகவே இருந்தது. வெள்ளைளைக் கொடியை உயர்த்தக்கோரி என் மனைவியிடமிருந்து அடிக்கடி சிபாரிசும் வந்த வண்ணமாகவே இருந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் ( OCT 2014- MARCH 2015) CNN, BBC போன்ற ஒளியளைகள், ரஷ்யாவை படும் மோசமான வில்லனாகவும் உக்ரைன் நாட்டை உதைக்கு மேல் உதை வாங்கும் உத்தம வில்லனாகவும் உலகிற்க்கு திரையிட்டுக் காட்டிக்கொண்டிருந்தன. இடையில் அமேரிக்காவின் ஊடுருவல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்யா மீதான பொருளாதார அனுமதித் தடை, இவை இரண்டும் உக்ரைன் நாட்டை அடி வாங்காமல் காப்பாற்றி வந்தது ஆனால், "Winter Coming Soon" என்ற விலாட்மிர் புட்டீன் அவரின் கடுகு போன்ற உரை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பேரிடியைக் கொண்டு வந்தது. இதற்குக் காரணம், குளிர்காலத்தில் வீடுகளுக்கு வெப்பம் பெறத் தேவைப்படும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. எனவே, " குளிர்காலத்தில் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்" என்றற ரஷ்யாவின் குளிர்ந்த மிரட்டல் ஐரோப்பிய நாடுகளைக் குளிர் காலத்திற்கு முன்பாகவே உறையச் செய்தது. இந்த நிலை மோசமடைந்தால், ரஷ்யா நுழைவதற்கான அயல் நாட்டு நுழைவுச்சான்றிதழ் பெரும் வாய்ப்பு கண்டிப்பாக என் கைவிட்டுப் போகும் நிலை வந்தது.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே, கூகல் google இல்லாத நாட்டிற்கு தனியே பயணம் செல்லாதே. இது நான் சீனாவில் கஷ்டப்பட்டு கண்டெடுத்த வாசகம். பேஸ்புக் facebook பக்கமாக தகவல் தேடலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. யாஹூ yahoo சொல்ல வேண்டியதில்லை. சீன அரசாங்கத்தை இப்போபோது நன்கு அறிந்துக்கொண்டேன். 

6 மணி நேரம் அல்லல் பட்ட பிறகு ஒரு வழியாக மூசி யுஆன்  பேருந்து நிலையம் Muxi Yuan Bus Station வந்தடைந்தேன். அதிகம் ஒதுக்கு புறத்தில் அமைந்திருந்ததால் தேடிப் பிடிப்பதில் கஷ்டம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி இந்த பேருந்து நிலையத்தை அதிகமாக மொங்கோலியா செல்பவர்களும் மொங்கோலியாவிலிருந்து சீனா வருபவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதன் விளைவாக ' நாடு கடத்தப்பட்ட ' நிலையே  மூசி யுஆன்  பேருந்து நிலையத்திற்கு.    

  மூசி யுஆன்  பேருந்து நிலையம்                              

தனியாக பயணம் செய்யும்பொழுது சில நேரங்களில் இது போன்ற அலைச்சலுக்குள்ளாவது சகஜமே என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு அடுத்த நெடுந்தூரப்பயணத்திற்கு ஆயத்தமானேன்.

பெய்ஜிங் Beijing தொடங்கி எர்லியன் Earlian வரை. எர்லியன் என்ற ஊர் சீனா-மொங்கோலியா எல்லையில் உள்ளது. பேருந்து வழி பயணம் என்றால் ஏறக்குறைய 16 மணி நேரம் தேவைப்படும். இந்த ஊரைக் கடந்தப் பிறகே மொங்கொலியா எல்லையில் இருக்கும் சமீன் - உட் Zamiin Udd என்ற ஊரைச் சென்றடைய முடியும். தொடராக அங்கிருந்து உலான் பதார் சென்றடைய முடியும். 

மூசி யுஆன்  பேருந்து நிலையம் சென்றடைந்தவுடன்  #ஆச்சரியம் #அதிர்ச்சி #பதட்டம் இவை அனைத்தும் எனக்காக சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருந்தன. எப்பொழுதும் கூட்டமும் நெரிசலாகவும் காட்சியளிக்கும் சீனாவின் மற்ற பேருந்து நிலையங்கள் போல் இல்லாமல், இந்தப் பேருந்து நிலையத்தில் கூட்டம்   குறைவாகவும் நெரிசல் நிகழாமலுமே காட்சியளித்தது. நிசப்தம் சற்று கூடுதலாக இருந்ததால் சரியான இடத்திதிற்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் தலைத் தூக்க ஆரம்பித்தது. குழப்பம், சற்று நடுக்கம் கலந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன்.............. அப்போதுதான்,     பேருந்துக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்து பெய்ஜிங் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நோட்டமிட ஆரம்பித்தேன். மற்ற கண்களும் என்னையே நோட்டமிட்டன. குறிப்பாக அங்குள்ள சிறுவர்கள்.

திடீரென எனை நோக்கி ஏழடி உயரத்தில், பெருத்த மொங்கொலியர் போன்று தோற்றமளிக்கும்  ஒருவர் நடந்து வந்தார். அருகே வந்தவர்  என் கையில் இருக்கும் டிக்கெட்டைக் கேட்டார். ஒரு வேளை இவர்தான் பேருந்து ஓட்டுனராக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் டிக்கெட்டை கொடுத்தேன். உண்மையை சொல்லப் போனால்  அவரைப் பார்க்க பேருந்து ஒட்டுனர் போல கொஞ்சம் கூட தெரியவில்லை மாறாக ஒரு அடியாளைப் போலவே தோற்றமளித்தார். தோட்ட வேலைக்குப் போனவன் கோட்டுசூட்டு போட்ட கதையாக.

டிக்கட்டைப் பார்த்து விட்டு, தன்னோடு வரச் சொல்லும் வகையில் கை பாவனை செய்துவிட்டு பேருந்துகள் நிற்கும் இடம் நோக்கி  விரைந்து நடக்க ஆரம்பித்தார். 15 கிலோ பாரத்தைப் பின் புறமும் 5 கிலோ பாரத்தை முன் புறமும், கணக்கிலடங்கா மகிழ்சியை மனச்சுவரிலும்  மாட்டிக்கொண்டு அவர் பின் நடக்க ஆரம்பித்தேன். நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த 'சிலிபேர் பஸ்' Sleeper Bus பயணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கப் போகிறது என்ற உற்சாகத்தில். 'சற்றுமுன்பே பூமியைத் தொட்ட குதிரைக் குட்டியின் கால்களைப் போல' துள்ளிக் குதிக்க ஆரம்பித்தன எனது கால்கள்.

ஏறக்குறைய 20 பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் எந்தப் பேருந்தையும் நோக்கி நடப்பதாகத் தெரியவில்லை, மாறாக வேறொரு திசையை நோக்கியே அவரின் நடை விரைந்தது. எனது உள் மனம் லேசாக கனக்க ஆரம்பித்தது. சுமார் 200 மீட்டர் கடந்தவுடன் பேருந்து நிலையத்தின் பின்புற வாசலை அடைந்தேன். அந்த மனிதர், அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் காதில் எதோ ஓதினார், எனைக் காட்டி.

அதைப் பார்த்தவுடன் குழப்பம் கலந்த பயம் எனை சூழ ஆரம்பித்தது. எனது இதயம் பந்தயக் குதிரையாய் வேகம் பிடித்தது எதிராக எனது கால்கள் நொண்டிக் குதிரையாக நடை தளர்ந்ததன. என் தொண்டைக் குழாய் வரண்டது.